பச்சை பயறு பயன்கள்

பாசி பயறில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பாசி பயறில் விட்டமின் பி9 (ஃபோலேட்டுகள்) மிகஅதிகளவும், பி1 (தயாமின்) அதிகளவும் காணப்படுகின்றன. மேலும் இதில் விட்டமின் பி5 (நியாசின்), பி6 (பைரிக்டாஸின்), பி2 (ரிபோஃப்ளோவின்), விட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை மிகஅதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை அதிகளவும் காணப்படுகின்றன.  மேலும் இதில் செலீனியம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இதில் அதிகளவு நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன.
பாசி பயறு – மருத்துவப் பண்புகள்
பாசி பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகியவை உடல்நலத்தை பாதுகாக்கின்றன. இப்பயறானது கண்கள், கேசம், நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்த
பாசி பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இது தனித்துவமான ஸ்டார்ச்சைக் கொண்டுள்ளது. இது செரிமானப்பாதையில் நல்ல பாக்டீரியாக்களின் செயலினைத் துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இப்பயிறில் காணப்படும் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனால் மற்ற பயறுகளைவிட பாசி பயறானது எளிதில் செரிமானம் அடைவதுடன் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்க
பாசி பயறில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இப்பயறில் காணப்படும் புரதச்சத்தானது இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடிய என்சைம்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. எனவே பாசிபயறினை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.
இதயத்தைப் பாதுகாக்க

 பாசி பயறில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் கெட்ட கொழுப்புகள் உடலில் சேருவதைத் தடை செய்கின்றன. பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றிற்கு கெட்ட கொழுப்புகளின் செயல்பாடுகள் முக்கிய காரணமாகும். மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்டுகளான வெர்டிக்சின் மற்றும் ஐசோ வெர்டிக்சின் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்வதோடு இரத்த குழாய்களில் உண்டாகும் காயங்களைச் சரிசெய்வதோடு வீக்கத்தையும் குறைக்கின்றன. மேலும் இப்பயறானது இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. எனவே பாசி பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து இதயத்தைப் பாதுகாக்கலாம்.
நீண்டகால நோய்களை சீராக்க
பாசி பயறில் பீனாலிக் அமிலம், ப்ளவனாய்டுகள், காபிக் அமிலம், சின்னமிக் அமிலம் உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிஜெனட்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகள் நீண்டகால நோய்களான சர்க்கரை நோய், இதயநோய், புற்றுநோய் ஆகியவை ஏற்பட காரணமாகின்றது. எனவே நீண்டகால நோய்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்க நாம் பாசி பயறினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய உடல்எடை குறைப்பிற்கு
பாசி பயறில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து பசியை உண்டாக்கும் நொதியான ஹெர்லினின் செயல்பாட்டினை தடைசெய்கிறது. மேலும் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. எனவே பாசி பயறினை உண்டு ஆரோக்கிய எடை இழப்பினைப் பெறலாம்.

கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு
கர்ப்பிணிகள் பொதுவாக ஃபோலேட்டுகள் நிறைந்த உணவினை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு குழந்தையானது குறைபாடுகள் இன்றி பிறக்கவும் வழிவகுக்கிறது. பாசி பயறானது ஃபோலேட்டுகளை அதிகளவு கொண்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் இப்பயறில் காணப்படுகின்றன. எனவே இப்பயறினை அடிக்கடி உண்டு கர்ப்பிணிகள் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

கேசப் பராமரிப்பிற்கு
பாசி பயறில் காணப்படும் செம்புச்சத்து கேச பராமரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் ஆகியவற்றை உடலானது முறையாக பயன்படுத்த செம்புச்சத்தானது அவசியமானதாகும். பாசி பயறானது அதிகளவு செம்புச்சத்தைக் கொண்டுள்ளது. எனவே இதனை உண்ணும்போது இரும்புச்சத்தானது உடலில் எடுத்துக் கொள்ளப்பட்டு மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்படுகிறது. மூளையின் ஆரோக்கியமான செயல்பாடு கேசத்தை அடர்த்தியாகவும் பொலிவாகவும் இருக்கச் செய்கிறது.
சருமம் பளபளப்பாக
பாசி பயறில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள செம்புச்சத்து சருமத்திற்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக்குகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துகள் சருமத்தை பருக்கள், காயங்களிலிருந்து பாதுகாக்கிறது. எனவே பாசி பயறினை உணவில் சேர்த்து சரும பளபளப்பைப் பெறலாம்.

 பாசி பயறினைப் பற்றிய எச்சரிக்கை

பாசி பயறினை அதிகமாக உண்ணும்போது சளி, உடல்வலி உண்டாகும். சிலருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்படலாம்.

பாசி பயறினை வாங்கி உபயோகிக்கும் முறை

பாசி பயறினை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் பூச்சிகளின் பாதிப்பு இல்லாதவற்றை வாங்கி ஈரமில்லாத அதிக வெப்பம் இல்லாத இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பாசி பயறானது முளைக்க வைத்தோ, சமைத்தோ உண்ணப்படுகிறது. இதிலிருந்து சூப்புகள், கேக்குகள், புட்டிங்குகள், ஐஸ்கிரீம்கள், இனிப்புகள் தயார் செய்யப்படுகின்றன. ஆரோக்கியம் மற்றும் பொலிவு தரும் பாசி பயறை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.









Comments

Popular posts from this blog

பஞ்ச பூதங்கள்

முருங்கையின் பயன்கள்